திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
11/4/2025 3:13:55 PM
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் இன்று அதிகாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 28ம்தேதி தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
7ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் அதன்பின்னர் தீபாராதனை நடந்தது. அதிகாலை 5.15 மணிக்கு கோயிலிலிருந்து தெய்வானை தபசு காட்சிக்கு புறப்பட்டார். வீரராகவபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகேயுள்ள தபசு மண்டபத்தில் வந்திறங்கினார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், கோயிலிலிருந்து புறப்பட்டு தபசு மண்டபத்தில் தெய்வானைக்கு காட்சி கொடுத்தார். பின்னர் தெற்கு ரதவீதி மேல ரதவீதி சந்தியில் தோள்மாலை மாற்றும் வைபவத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
பின்னர் இரவு 11.30 மணிக்கு சுவாமி கோயிலை வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வசந்த மண்டபத்தில் அம்பாளுக்கு அலங்காரம் நடந்தது. அதன்பின்னர் மேலக்கோபுர வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு சுவாமியும், அம்பாளும் வந்தனர். அங்கு ஹோமங்கள் நடந்தது. பின்னர் அம்பாள் கோயிலில் எழுந்தருளியதும், சுவாமி கோயிலில் உள்ள அம்மன்களுக்கு தாலி கட்டினார். மீண்டும் இருவரும் திருமண மண்டபத்தில் எழுந்தளுளினர். அங்கு இன்று அதிகாலை 1.30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மொய் எழுதி பிரசாதம் பெற்றனர்.