கேரளாவில் கனமழை எதிரொலி: 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தம்: வாக்குசாவடிகள் திடீர் மாற்றம்
10/21/2019 3:32:27 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கியது. கனமழையால் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. இதேபோல் வாக்குசாவடிகளும் அதிரடியாக மாற்றப்பட்டன. கேரளாவில் வட்டியூர்க்காவு, அரூர், கோன்னி, எர்ணாகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த 5 தொகுதிகளிலும் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ், பா.ஜ. கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரூர் தவிர மற்ற 4 தொகுதிகளும் காங். கூட்டணி வசமிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக மொத்தம் 3,696 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது தவிர 6 கம்பெனி மத்திய போலீசாரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வட்டியூர்க்காவு தொகுதியில் 20 வாக்குப்பதிவு மையங்கள் மாதிரி வாக்குச்சாவடிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. இங்கு வரும் வாக்காளர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. வரிசையில் நின்று சிரமப்படாமல் இருக்க அவர்களுக்கு டோக்கன் வழங்கி இருக்கைகளில் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், மின்விசிறி, செய்தித்தாள்களும் வழங்கப்பட்டன. இடைத்தேர்தல் நடக்கும் 5 தொகுதிகளிலுமாக மொத்தம் 9 லட்சத்து 57 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர். வட்டியூர்க்காவு 8, கோன்னி 5, அரூர் 6, எர்ணாகுளம் 9, மஞ்சேஸ்வரம் 7 என மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 896 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வட்டியூர்க்காவு ெதாகுதி அமைந்துள்ள திருவனந்தபுரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்யத் தொடங்கியது. இன்று காலையும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாக்களிக்க வருகின்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. பல வாக்குச்சாவடிகள் காலையிலேயே வெறிச் சோடி காணப்பட்டன. இதற்கிடையே காலை 9 மணி நிலவரப்படி வட்டியூர்க்காவு தொகுதியில் 10 சதவீதமும், அரூர் தொகுதியில் 9 சதவீத வாக்குகளும், கோன்னி தொகுதியில் 7 சதவீத வாக்குகளும், எண்ணாகுளம் தொகுதியில் 5 சதவீத வாக்குகளும், மஞ்சேஸ்வரம் தொகுதியில் 11 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.
வாக்குச்சாவடிகள் திடீர் மாற்றம்
மழை காரணமாக எர்ணாகுளம் தொகுதியில் 6 வாக்குச்சாவடிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த மையங்களில் வாக்குப்பதிவை தொடங்க முடியவில்லை. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து அந்த மையங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.