பாகிஸ்தான் கேப்டன் நீக்கத்துக்கு எதிர்ப்பு: தோனிக்கும்தான் வயசாயிடுச்சு...சர்பராஸ் மனைவி பகீர் கேள்வி
10/21/2019 3:27:01 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்கியது. மேலும், பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 தொடர்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டனாக செயல்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்தது.
பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், தற்போது சர்பராஸ் அகமதுவை நீக்குவதில் முனைப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சர்பராஸ் அகமது மனைவி குஷ்பத் சர்பராஸ் தனியார் செய்தி நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், ‘எனது கணவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தெரியும். ஆனால், இது அவருக்கான முடிவல்ல. ஏன் அவர் ஓய்வு பெற வேண்டும். அவருக்கு 32 வயது தான் ஆகிறது. தற்போது தோனிக்கு எத்தனை வயதாகிறது? அவர் என்ன ஓய்வு பெற்று விட்டாரா? எனது கணவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்’ என்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் பல்வேறு காரணங்களால் அணியில் இடம்பெறாமல் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்தாலும் தோனி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். மேலும் சமீபத்தில் பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்குலி, வரும் 24ம் தேதி நடைபெறும் தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பின் தோனி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். இச்சூழலில் சர்ஃபராஸ் அகமது மனைவியின் இந்த கேள்வி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.