தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சிக்சர் மழையால் புதிய உலக சாதனை: ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா
10/21/2019 3:12:31 PM
ராஞ்சி: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடந்த முதல் இரண்டு டெஸ்டிலும், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தென் ஆப்ரிக்கா அணி 488 ரன்கள் பின்தங்கி உள்ளது. நேற்றைய போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிந்ததால், புதிய உலக சாதனையை இந்திய அணி அரங்கேற்றி உள்ளது.
இந்திய அணி வீரர்கள் இந்த தொடரில் மொத்தமாக இதுவரை 47 சிக்சர்களை பறக்கவிட்டனர். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய ஆஸ்திரேலிய அணியின் (இங்கிலாந்துக்கு எதிராக 40 சிக்சர்கள்) உலக சாதனையை இந்திய அணி முறியடித்தது. அதன்படி, ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய அணிகள் பட்டியலில், இந்தியா - 47 சிக்சர்கள் (எதிர் - தென் ஆப்ரிக்கா - 2019), ஆஸ்திரேலியா - 40 சிக்சர்கள் (எதிர்- இங்கிலாந்து - 2013), பாகிஸ்தான் - 37 சிக்சர்கள் (எதிர் - இந்தியா - 2005), இங்கிலாந்து - 36 சிக்சர்கள் (எதிர்- ஆஸ்திரேலியா - 2005) என்ற நிலையில் உள்ளது.
முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி - எல்கரையும், உமேஷ் யாதவ் - குயிண்டன் டி காக்கையும் அவுட்டாக்கினர். இருவருமே பவுண்சரில் விக்கெட் கைப்பற்றினர். அபூர்வமாக நடந்த நிகழ்வு குறித்து, கிரிக்கெட் விமர்சகர் கவாஸ்கர் கூறுகையில், ‘‘இந்திய ஆடுகளத்தில் இப்படி ஒரு மாற்றமா? பொதுவாக இந்திய ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் 2 விக்கெட்டையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் அவுட்டான விதம், மிகவும் ஆச்சரியமாக உள்ளது. என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை’’ என்றார்.