தர்மபுரி அருகே பயங்கரம் தோட்டத்தில் உல்லாசமாக இருந்த வாலிபர் சுட்டு கொலை
10/11/2025 3:30:09 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள உலகளஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (39). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. கடந்த 8ம் தேதி ஆறுமுகம், சிக்குமாரண்டஅள்ளி பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரயில்வே போலீசார், சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். ரயில் மோதி உயிரிழந்துள்ளார் என கருதி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பிரேதப்பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் டாக்டர் மதன்ராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர், ஆறுமுகத்தின் உடலை பிரேதப்பரிசோதனை செய்தனர். அதில், சிதைந்திருந்த ஆறுமுகத்தின் உடலில் துப்பாக்கி குண்டின் உலோக சிதறல் இருந்தது. இதனால், சந்தேகம் கொண்ட மருத்துவக்குழுவினர், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, ரயில்வே போலீசார் சம்பவம் நடந்த சிக்குமாரண்டஅள்ளி ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்று விசாரித்தனர். அங்கு, ரயில் தண்டவாளத்தில் சடலம் சிதைந்திருந்த தடயங்கள் மட்டுமே கிடைத்தது. துப்பாக்கியால் சுட்ட தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால், வேறு இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, பின்னர், சடலத்தை தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டனர். அதன்பேரில் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் போலீசார் சோதனையிட்டனர். அதில், சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தின் நிலக்கடலை செடிகளுக்கிடையே ரத்தம் கொட்டிக் கிடந்தது கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் தீவிரமாக தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டதில், நாட்டு துப்பாக்கியில்இருந்து பாய்ந்த குண்டுகளின் சிதறல்கள் கிடந்தது. இதையடுத்து அந்த இடத்தில் தான், ஆறுமுகத்தை சுட்டு கொன்றிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, தோட்டத்தின் உரிமையாளர் சண்முகத்தை (45) பிடித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர், தான் ஆறுமுகத்தை சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அது பற்றி போலீசார் கூறியது: சண்முகம், தனது விவசாய தோட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார். அந்த பகுதிக்கு இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வந்து, பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. இதனால், தினமும் இரவில் துப்பாக்கியுடன் வந்து காட்டுப்பன்றிகளை சுட்டு விரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று, தனது தோட்டத்திற்கு நாட்டு துப்பாக்கியுடன் சண்முகம் வந்துள்ளார். அந்த நேரத்தில் கடலை செடிகளுக்கிடையே இருந்து முனங்கல் சத்தம் கேட்டுள்ளது. உடனே காட்டுப்பன்றிகள் இருப்பதாக கருதி, தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, அய்யோ என அலறியபடி சத்தம் கேட்டிருக்கிறது. பக்கத்தில் சென்று பார்த்தபோது, ஆறுமுகம் தலையில் குண்டு பாய்ந்து, ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவருக்கு அடியில் அதேப்பகுதியை சேர்ந்த பழனி மனைவி ராதா (36) இருந்தார். அவரின் முதுகு இடுப்பு பகுதியிலும் குண்டுகள் பாய்ந்திருந்தது.
சிறிது நேரத்தில் ஆறுமுகம் உயிரிழந்தார். ராதா வலியால் துடித்தார். கள்ளக்காதல் ஜோடியினர், கடலை செடிகளுக்கிடையே தனிமையில் உல்லாசமாக இருந்ததை அறியாமல், பன்றி என நினைத்து துப்பாக்கியால் சண்முகம் சுட்டுள்ளார். இந்த கொலையை வெளியே தெரியாமல் மறைக்க சண்முகமும், கள்ளக்காதலி ராதாவும் முடிவு செய்துள்ளனர்.அதன்படி ஆறுமுகத்தின் உடலை ரயில்வே தண்டவாள பகுதிக்கு தனது உறவினர் சின்னசாமி என்பவரின் உதவியுடன் சண்முகம் தூக்கிச்சென்றுள்ளார். அங்கு ரயில் வரும்போது, தண்டவாளத்தின் நடுவே போட்டுவிட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். ரயில் மோதி ஆறுமுகம் இறந்ததாக ரயில்வே போலீசார் முடிவு செய்ததும், எதுவும் தெரியாதது போல் சண்முகம் இருந்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே படுகாயமடைந்த ராதா, சிகிச்சை ஏதும் பெறாமல் வீட்டில் இருந்துள்ளார். அடுத்தநாள், வலி தாங்க முடியாமல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொலையில் சண்முகத்திற்கு உதவியாக இருந்த சின்னசாமியையும் ரயில்வே போலீசார் பிடித்தனர். தொடர்ந்து சண்முகம், சின்னசாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்காக மாற்றி, மாரண்டஅள்ளி போலீசில் ஒப்படைக்கவும் ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.