கேரளாவில் 6 பேரை கொன்ற பெண்: அதிகாரியின் குழந்தையையும் கொல்ல முயன்றார்
10/10/2025 3:15:26 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் 6 பேர் கொலை வழக்கில் கைதான ஜோளி தனக்கு போலி உயில் தயாரிக்க உதவிய பெண் தாசில்தாரின் மகளையும் கொல்ல முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைதான ஜோளியை காவலில் எடுக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய்தாமஸ். இவரது மனைவி ஜோளி கடந்த 2002 முதல் 20016க்கு உள்பட்ட காலகட்டத்தில் கணவர், மாமனார், மாமியார் உள்பட 6 பேரை கொலை செய்தார். அதோடு கணவரின் குடும்ப சொத்தை தனது பெயருக்கு மாற்றினார். இந்த உயில் விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக ராய்தாமசின் தம்பி ரோஜோ, போலீஸ் மற்றும் வருவாய்துறையில் புகார் செய்தார். விசாரணையில், போலி உயில் தயாரித்து மோசடி செய்ததும், இதற்கு தாமரசேரி வருவாய்துறை அதிகாரிகள் உதவியதும் தெரியவந்தது.
குறிப்பாக அப்போது துணை தாசில்தாராக ஜெயஸ்ரீ தான் ஜோளிக்கு போலி உயில் தயாரிக்க பெரும் உறுதுணையாக இருந்துள்ளார். ஜோளியின் வீட்டின் அருகில் தான் ஜெயஸ்ரீ வசித்துள்ளார். இதனால் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். எனவே ஜெயஸ்ரீ குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ஜெயக்கு 3 வயதில் ஒரு மகள் உண்டு. இந்த குழந்தை ஒன்றரை வயதாக இருந்த போது 2 முறை வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை வாந்தி எடுத்த இரு முறையும் ஜெயஸ்ரீ வீட்டில் ஜோளி மட்டுமே இருந்துள்ளார். இரு முறையும் குழந்தை தீவிர சிகிச்சைக்கு பிறகே உயிர் பிழைத்து வந்தது.
ஜோளியின் கைதுக்கு பிறகு நடந்த விசாரணையில், பெண்கள், பெண் குழந்தைகளை தனக்கு பிடிக்காது என்று போலீசில் கூறியுள்ளார். இதனால் ஜெயஸ்ரீயின் குழந்தையையும் ஜோளிதான் விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கைதான ஜோளி, அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜுகுமார் ஆகிய 3 பேரும் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நாளை தாமரசேரி நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து ஜோளியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் தீர்மானித்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரியவந்துள்ளது.