ஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்
10/10/2025 3:02:09 PM
அண்ணாநகர்: ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கக்கோரி கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் செயல்பட்டுவரும் நிஞ்ஜா, கார்ட் மற்றும் உடான் போன்ற தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் பெறாத நபர்கள் மூலம் குடோன்கள் அமைத்து தரமற்ற மற்றும் அழுகிய காய்கறிகள், பழங்களை பாதுகாத்து சென்னை நகர மக்களுக்கு சப்ளை செய்து வருகின்றன. இதனால் தரமான காய்கறிகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சென்னை நகரில் ஆன்லைன் நிறுவனங்களின் அழுகிய காய்கறி சப்ளையை தடை செய்ய வலியுறுத்தி கோயம்பேடு மார்க்கெட் சாலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் காய்கறி வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைனில் காய்கறிகளை பதிவு செய்தவர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை வியாபாரிகள் சிறைப் பிடித்தனர். அதில் அழுகிய காய்கறிகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் கோயம்பேடு வணிக வளாக நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் நிர்வாக அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவரிடம் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறுகையில், ‘’சென்னை நகரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு நாளைக்கு 20 வாகனங்கள் மூலம் மக்களுக்கு தரமற்ற காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தரமான காய்கறிகளை விற்பனை செய்யும் உரிமம்பெற்ற வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தரமற்ற காய்கறிகளை விற்பனை செய்யும் குடோன்களை மூடவேண்டும்’’ என்றார். ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் ஆன்லைன் நிறுவனங்களுக்கு காய்கறி சப்ளையை தடை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’’ என நிர்வாக அதிகாரி உறுதி அளித்தார்.இதை ஏற்று அனைத்து வியாபாரிகளும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.