உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10/10/2025 2:56:42 PM
சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 12ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது. இதேபோல், இன்னும் ஒருசில நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தற்போது வறண்ட வானிலை காணப்படுகிறது. இதனால், வெப்பம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது, வறண்ட வானிலை காரணமாக வெப்பசலனம் காணப்படுகிறது. இதனால், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று முதல் 12ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்படும். 12ம் தேதி வரை இது தொடரும் எனவும் கூறியுள்ளது.