திருவள்ளூர், திருத்தணியில் விடிய விடிய மழை: நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு
9/12/2025 3:48:15 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்றிரவு 10 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. படிப்படியாக வலுப்பெற்ற மழை இரவு முழுவதும் பெய்தது. இதன்காரணமாக சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தது. விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியது. திருத்தணி நகரில் உள்ள நந்தியாற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணி வரை கனமழை நீடித்தது. இதன்பிறகு மேகமூட்டத்துடன் சாரல்மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்தது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘திருத்தணி பகுதியில் கோடைகாலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. தற்போது மழை பெய்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளோம். இன்னும் மழை பெய்தால் விவசாயம் நடைபெறும். ஏரி, குளங்கள் நிரம்பினால் குடிநீருக்கும் பிரச்னை இருக்காது’ என்றனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு பலத்த மழை கொட்டியது. இதனால் திருவள்ளூர் நகர சாலைகள் மற்றும் ஆவடி நெடுஞ்சாலை, சி.வி.நாயுடு சாலை, பஸ் நிலையம் உட்பட பல பகுதிகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவள்ளூர் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கால்வாய்கள் சீராக இல்லாததாலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பையை கால்வாய்களில் கொட்டுவதாலும் மழைநீர் வெளியேற முடியாமல் தெருக்களில் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் திணறினர். ஒரு நாள் பெய்த பலத்த மழைக்கே சாலைகள் அனைத்து சேறும், சகதியுமாக மாறியதால் தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நகரின் நிலை என்னவாகும் என்ற நிலை மக்களிடம் கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், கிராமங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருத்தணியில், 173 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக செங்குன்றத்தில் 10 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மழையளவு (மி.,மீட்டரில்) விவரம்:திருத்தணி - 173, ஆர்.கே.பேட்டை- 86, பள்ளிப்பட்டு- 80, பூண்டி- 73, தாமரைப்பாக்கம்- 36, ஜமீன் கொரட்டூர்- 32, சோழவரம்- 28, செம்பரம்பாக்கம்- 24, திருவள்ளூர்- 24, பொன்னேரி- 23, திருவாலங்காடு- 21, கும்மிடிப்பூண்டி- 18, ஊத்துக்கோட்டை- 15, பூந்தமல்லி- 11, செங்குன்றம்- 10. மொத்தம்- 654 மி.மீட்டர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்தது. வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர் மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து இதமான சூழல் நிலவியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மதுராந்தகம் பகுதியில் நேற்றிரவு முதல் நல்லமழை பெய்து வருகிறது.