அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் சோனியா ஆலோசனை: மாவட்ட அளவில் புதிய பதவி ஏற்படுத்த திட்டம்
9/12/2025 3:04:21 PM
புதுடெல்லி: தற்காலிக தலைவராக பதவி ஏற்ற பிறகு, அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், சோனியா காந்தி இன்று காலையில் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட அளவில் புதிய பதவியை ஏற்படுத்துவது, மத்திய அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்வது, 3 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின்னர் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அதனால் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை வாபஸ் பெற வைக்க பல்வேறு தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் பல மாதங்கள் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியாகாந்தி, தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்ந்ெதடுக்கப்பட்ட பின்னரும் காங்கிரஸ் கட்சியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். இதனால், பல மாநிலங்களில் கட்சியின் தலைவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங், தற்போதைய முதல்வர் கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே மோதல் இருந்து வருகிறது. அதில் அவர்களின் ஆதரவாளர்களுக்கிடையே மோதலும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து மேலிட தலைவர்கள் விசாரித்து வந்தனர். இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டது. மேலும், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவருக்கும் கட்சி பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்ந்து போய் காணப்பட்டனர். இந்தநிலையில், திடீரென்று தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட சோனியாகாந்தி, அனைத்து மாநில தலைவர்களுடன் இன்று காலையில் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அனைத்து மாநில தலைவர்களும் கலந்து கொண்டனர். மேலும், தேசிய பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், மாநில சட்டமன்றக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தற்காலிக தலைவராக சோனியா பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அளவில் ‘‘ஊக்குவிப்பாளர்’’ என்ற புதிய பதவியை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உடனடியாக இந்தப் பதவியை நிறப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை, தொழிற்சாலைகள் மூடல் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறவும் ஆலோசனை நடத்தப்பட்டன. மேலும், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் மாநில தலைவர்களுக்கு சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். மகராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மூன்று மாநில தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.