போலி ஆவணங்கள் தயாரித்து தூத்துக்குடி வங்கியில் ரூ.5.50 கோடி மோசடி
9/12/2025 2:45:20 PM
தூத்துக்குடி: போலி ஆவணங்கள் மூலம் தூத்துக்குடி வங்கியில் ரூ.5.50 கோடி மோசடியாக கடன் பெற்ற சென்னை ஏற்றுமதி நிறுவன நிர்வாகிகள் 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டியில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஷிப்பிங் நிறுவனத்துடன் வர்த்தக ரீதியிலான தொடர்பில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள தங்களது நட்பு நிறுவனத்திற்குரிய ஆவணங்களை வைத்து தனியார் வங்கியில் ரூ.5.50 கோடி கடன் கேட்டுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள இரு வங்கிகள் சென்னை ஏற்றுமதி நிறுவனத்திற்கு கடந்த 2.1.2025 மற்றும் 31.5.2025 ஆகிய இருநாட்களில் ரூ.5.50 கோடி கடன் வழங்கியுள்ளது.
தற்போது கடன் வழங்கிய தூத்துக்குடி வங்கி கிளை அதிகாரிகள் சென்னை நிறுவனம் கடனுக்காக சமர்ப்பித்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் அவை போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி தனியார் வங்கி அதிகாரிகள், எஸ்பி அருண்பால கோபாலனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கிண்டியில் இயங்கிவரும் ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநர், முன்னாள் இயக்குநர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.