இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக குழந்தையை கொன்றவர் கைது
9/11/2025 2:59:52 PM
புழல்: புழல் பகுதியில் தனது இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதி, மனைவியின் குழந்தையை கொன்ற வாலிபரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (27). இவருக்கு மனைவி பவானி (24), மகள் யாழினி (3), மகன் ராஜேஷ் (1) ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் இத்தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
பின்னர் புழல், கண்ணப்பசாமி நகர், 14-வது தெருவில் தனது 2 குழந்தைகளுடன் பவானி தனியே வசித்து வந்தார். அப்போது சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆசிப் (25) என்ற வாலிபரை பவானி 2-வது திருமணம் செய்து, ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி பவானியின் மகள் யாழினி இறந்து போனதாக முன்னாள் கணவருக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கடந்த 8-ம் தேதி புழல் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாழினியின் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 2-வது கணவரான ஆசிப் தலைமறைவானார். பவானியிடம் விசாரித்தபோது, தனது இல்லற வாழ்க்கைக்கு யாழினி இடையூறாக இருப்பதாக ஆசிப் கூறிவந்தது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவான ஆசிப் கொடுங்கையூரில் இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதற்கு யாழினி இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக ஆசிப் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை இன்று காலை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.