ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் கைது: நீலாங்கரையில் வீட்டில் பதுங்கியிருந்தபோது துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கினர்
9/10/2025 3:45:03 PM
துரைப்பாக்கம்: ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் நீலாங்கரையில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்தான். அவனை நீலாங்கரை போலீசார் உதவியுடன் கொல்கத்தா போலீசார், துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரியா, ஈராக் நாடுகளில் உள்ள பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, இந்த தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள், பிணைக் கைதிகளின் தலைகளை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், பாட்னா குண்டு வெடிப்பில் தொடர்புடையவருமான மேற்கு வங்கத்தை சேர்ந்த ஷேக் அசதுல்லா (35) என்பவன், நீலாங்கரையில் தங்கியிருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொல்கத்தா போலீசார், நேற்றிரவு சென்னைக்கு விரைந்தனர். அவர்கள், நீலாங்கரை போலீசார் உதவியுடன், ஷேக் அசதுல்லா தங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். துப்பாக்கி முனையில், ஷேக் அசதுல்லாவை சுற்றி வளைத்து பிடித்து, நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலாங்கரைக்கு வந்துள்ளான். இங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்துள்ளான். இதற்கு முன்பு 3 முறை சென்னைக்கு வந்துளான். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புத்தகயாவில் 2013ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் முக்கிய குற்றாளியின் நண்பன்’ என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேற்கு வங்கத்துக்கு அழைத்து செல்ல உள்ளதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்தனர்.
மேலும், ஷேக் அசதுல்லாவுடன் வேறு யாரேனும் தங்கியுள்ளார்களா, அவனை பார்க்க யார் யாரெல்லாம் வந்தார்கள், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டானா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இது தவிர, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும், ஓட்டல்கள், விடுதிகளிலும் வடமாநிலத்தை சேர்ந்த பலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடன், கைதான ஷேக் அசதுல்லாவுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.