ரசிகர்கள் கூட்டத்தில் இது வேற ரகம்... இந்தாங்க பிடிங்க என் ஆட்டோகிராஃப்...
9/4/2025 3:08:52 PM
ஜமைக்கா: இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய அணியின் கேப்டன் என்ற புதிய சாதனையை கோஹ்லி படைத்துள்ளார். பொதுவாக, கோஹ்லியிடம் ஏராளாமான ரசிகர்கள் ஆட்டோகிராஃப் பெறுவது வழக்கம்.
ஆனால், இம்முறை அதற்கு நேர்மாறாக கோஹ்லி, ரசிகன் ஒருவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கோஹ்லி 7 வயது ரசிகனிடமிருந்து (சிறுவன்) ஆட்டோகிராஃப் வாங்க தீவிரம் காட்டினார். அப்போது மற்றொரு ரசிகர், கோஹ்லியிடம் ஆட்டோகிராஃப் பெற முயன்ற போது, ‘கொஞ்சம் இருங்கள்! அவரது ஆட்டோகிராஃப் எனக்கு வேண்டும்’ எனக் கோஹ்லி கூறினார்.
பின்னர், ஆட்டோகிராஃப் நன்றாக இருப்பதாக அந்த ரசிகனை கோஹ்லி பாராட்டினார். அப்போது அருகிலிருந்த கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் புன்னகைத்தார். இந்த வீடியோ குறித்து டுவிட்டர் பயனாளி ஒருவர், ‘என்னுடைய 7 வயது உறவுக்கார மகன், ஜமைக்காவில் டெஸ்ட் போட்டியை பார்த்த போது கோஹ்லியிடம் சென்று உங்களுக்கு என் ஆட்டோகிராஃப் வேண்டுமா? என கேட்டதற்கு கோஹ்லியும் சம்மதித்துள்ளார்’ என்று பதிவிட்டுள்ளார். ரசிகனிடம் கோஹ்லி நடந்துகொண்ட இந்த அணுகுமுறையை பலரும் பாராட்டி உள்ளனர்.