நாளை மறுதினம் சுதந்திரதின கொண்டாட்டம்: சென்னை கோட்டையில் முதல்வர் கொடியேற்றுகிறார்....அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார்
8/13/2019 3:23:08 PM
சென்னை: நாடு முழுவதும் நாளை மறுதினம் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார். விழாவில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படுகிறது.
சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை மறுதினம் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. தலைநகர் சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் காலை 9 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைத்து, உரை நிகழ்த்துகிறார்.
முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 8.35 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். பின்னர் 8.45 மணிக்கு சென்னை காவல்துறையினர் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வரை அழைத்து செல்வார்கள். கோட்டை அருகே அணிவகுப்பு மரியாதை மேடை அருகே முதல்வர் வந்ததும் முப்படை தளபதிகள் மற்றும் கடலோர காவல் படை கிழக்கு மண்டல கமாண்டர், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமை செயலாளர் சண்முகம் அறிமுகம் செய்து வைப்பார். தொடர்ந்து காவல் துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொள்வார்.
பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடும் முதல்வர், சரியாக 8.59 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்து சேருவார். அவர் 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்படும். நாட்டுப்பண்-காவல் துறையினர் கூட்டுக்குழல் இசை வாசிக்கப்படும். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி சுதந்திர தின உரையாற்றுவார். அதன் பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, தமிழகத்தில் கடந்த ஆண்டு சாதனை புரிந்த ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும். அத்துடன் ₹5 லட்சம் ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் சாதனை படைத்த ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது வழங்கப்படும். விருது பெறுபவருக்கு ₹5 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்க மடல், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.
இதை தொடர்ந்து, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது 3 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் 5 பேருக்கும், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள் 2 பேருக்கும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் என்ற வரிசையில் சிறந்த மாநகராட்சி, சிறந்த நகராட்சி, சிறந்த பேரூராட்சிகளுக்கு வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களை முதல்வர் வழங்கி கவுரவிப்பார். பின்னர் முதல்வருடன் விருது பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். தொடர்ந்து விழா பந்தலில் குழந்தைகளுக்கு முதல்வர் இனிப்பு வழங்குவார். பிறகு அங்கிருந்து முதல்வர் புறப்பட்டு செல்வார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை வளாகம், தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகம் வருபவர்கள் அனைவரையும் போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையம், சென்ட்ரல் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.