கேரளாவில் மழைக்கு 5 நாளில் 89 பேர் பலி: 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’
8/13/2019 3:21:05 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 5 நாளில் கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. மழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கேரளாவில் கடந்த 2 வாரமாக பெய்து வந்த கனமழை நேற்று சற்றே ஓய்ந்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே புத்துமலை ஆகிய பகுதிகளில் நேற்று தொடர்ந்து உடல்களை தேடும் பணி நடந்தது. இதில் கவளப்பாறையில் 6 உடல்கள் மீட்கப்பட்டன. புத்துமலையில் நேற்று உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மலப்புரம் மாவட்டம் கோட்டக்குன்னு பகுதியில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. திருச்சூரில் மீன்பிடிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற கணவன், மனைவி உள்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இதையடுத்து நேற்று மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. அதே வேளையில் கடந்த 5 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. கவளப்பாறையில் மண்ணுக்கடியில் சிக்கியதாக கருதப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அருகில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தற்போதைய கணக்குப்படி 40 பேர் மண்ணில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதேபோல புத்துமலையில் 7 பேர் சிக்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க கேரளாவில் இன்றும் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மழை குறைந்து உள்ளதால் கேரளாவில் ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டு உள்ளது. ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வெள்ளம் பாதித்த மலப்புரம், வயநாடு மாவட்டங்களை இன்று முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இதையடுத்து ெவள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லவும் முதல்வர் திட்டமிட்டு உள்ளார். கேரளா முழுவதும் வெள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2.75 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.