செங்குன்றம் அருகே குடோனில் 25 டன் தேக்கு கட்டை பறிமுதல்: டிரைவர் கைது
8/8/2025 2:50:55 PM
புழல்: செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிவைத்திருந்த தேக்குமர கட்டைகளை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். சென்னை செங்குன்றம் அடுத்த சிவந்திஆதித்தன் நகரில் உள்ள ஒரு குடோனில் பர்மா தேக்கு மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நள்ளிரவு 2 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு ஒரு குறிப்பிட்ட குடோனில் சோதனை நடத்தினர்.
அப்போது அசாம் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான 25 டன் தேக்குமர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தேக்குமர கட்டைகளை பறிமுதல் செய்தனர். குடோனில் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் அண்ணாதுரை (42) கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தேக்குமரக் கட்டைகளை திருவள்ளூர் மாவட்டம், சீத்தஞ்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். டிரைவரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.