கண்மாயில் குண்டு வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்: ராமநாதபுரத்தில் பரபரப்பு
7/29/2019 3:14:30 PM
சாயல்குடி: கண்மாயில் கிடந்த 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் 2 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள ஆத்திக்குளத்தை சேர்ந்த பாலமுருகனின் மகன் சூர்யா(8). அதே பகுதியை சேர்ந்த செந்திலின் மகன் வினித்(8). இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை இருவரும் அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு விளையாட சென்றனர். தற்போது அந்த கண்மாயில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. கண்மாயில் அவர்கள் விளையாடி கொண்டிருந்த போது, நூலால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த 2 பொருட்களை கண்டெடுத்தனர். அந்த பொருட்களை வைத்து அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அவை வெடித்து சிதறின. இதில் சிறுவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் டிஎஸ்பி ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் ெவடித்து சிதறியவை சிறிய ரக வெடிகுண்டுகள் என தெரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு வெடித்ததில் மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பி ராஜேஷ் கூறுகையில், ‘‘அதிக சத்தத்துடன் வெடிக்கும் வகையில் இந்த வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு கண்மாயில் இந்த வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. கண்மாயில் மேலும் வெடிகுண்டுகள் உள்ளனவா என்று மோப்பநாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடினோம். ஆனால் வேறு எதுவும் கிடைக்கவில்லை’’ என்றார்.