தமிழகத்தில் 710 தாலுகாவில் தண்ணீர் சேமிப்பு திட்டம்
7/11/2025 3:26:57 PM
சென்னை: தமிழகத்தில் அபாயகரமான பகுதி என கண்டறியப்பட்ட 710 தாலுகாக்களில் தண்ணீர் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை குறைந்து கொண்டே செல்கிறது. இது தொடர்பாக கடந்த அக்டோபரில் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,139 தாலுகாக்களில் இந்த ஆய்வு நடந்தது. இதில், 358 தாலுகாக்கள் மிகவும் அபாயகரமானதாகவும், 105 தாலுகாக்கள் அபாயகரமானதாகவும், 212 தாலுகாக்கள் அபாயகரமான பகுதியாக மாறி வருவதாகவும், 35 தாலுகாக்களில் உப்புதன்மை மற்றும் மோசமான நீர் கிடைப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில், 429 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தண்ணீர் பிரசனையை போக்கவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் மிகவும் அபாயகரமான பகுதியாகவும், அபாயகரமான பகுதியாகவும் கண்டறியப்பட்ட 463 தாலுகாக்கள், மற்றும் அபாயகரமான பகுதியாக மாறி வரும் 212 தாலுகாக்கங்களிலும், 35 உப்புதன்மையாக மாறி வரும் தாலுகாக்களிலும் தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பேரில் மிகவும் பிரச்சனைக்குரிய தாலுகாக்களில் தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் வறட்சி பாதித்த 22 மாவட்டங்களிலும் ஜல்சக்தி அபியான் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த குழுவினர் 22 மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்துவது தொடர்பாகவும், அங்கே தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தனர். அந்த குழுவினரிடம் பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர்கள் தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டிய ஏரிகள் தொடர்பான விவரங்களை அறிக்கையைாக ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினரிடம் அளித்துள்ளனர். இவ்வாறு பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை நீர் நிலைகள் ஆய்வு
சென்னையில் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 104 நீர்நிலைகள் பல்வேறு திட்டங்களின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், 114 நீர் நிலைகளை சீரமைக்க ரூ.100 கோடியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. அதன்படி, சென்னையில் சீரமைக்கப்பட்ட நீர் நிலைகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழு நேற்று பார்வையிட்டது. ராயபுரம் தேவராஜ் தெருவில் உள்ள முத்துகுமாரசாமி குளம், மதுரவாயல் வி.ஜி.என் நகரில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகாலையும் அந்த குழு பார்வையிட்டது. இந்த மழைநீர் வடிகால் நேரடியாக நீரை குளத்தில் சேர்க்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில், நீர் நிலைகளை சீரமைப்பது, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்யபட்டுள்ள பணிகளை மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கினர்.