இன்று மேற்கிந்திய தீவுகளுடன் மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா
6/27/2019 4:02:34 PM
மான்செஸ்டர்: ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்று மான்செஸ்டரில் நடைபெறும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. இத்தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இப்போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி, இதுவரை 5 போட்டிகளில் ஆடி, அவற்றில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி, மழையால் முழுவதுமாக ரத்தானது. மேற்கிந்திய தீவுகள் அணி, இத்தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை சொற்ப ரன்களில் சுருட்டி, அட்டகாசமான துவக்கத்தை அளித்தது.
ஆனால் அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் வரிசையாக தோல்விகளை தழுவியுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி போட்டி மட்டும் மழையால் ரத்து செய்யப்பட்டது. உலக கோப்பை போட்டிகளில் இதுவரை இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகள் 8 முறை மோதியுள்ளன. அவற்றில் இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1983ம் ஆண்டு நடந்த உலக கோப்பை பைனலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்ற வெற்றி அது என்று கூறினால் அது மிகையாகாது. மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை போட்டிகளில் கடைசியாக இந்திய அணியை கடந்த 1992ம் ஆண்டு வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, ஆறுதல் வெற்றிக்காக இப்போட்டியில் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸல், காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுனில் அம்ப்ரிஸ், அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராத்வெய்ட், சிறப்பாக ஆடினார். இருப்பினும் 5 ரன்களில் நியூசிலாந்திடம், மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்தது. நூலிழையில் வெற்றியை தவற விட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள், அப்போட்டியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் என்று கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வலுவான அணிகளை எளிதாக வீழ்த்திய விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தட்டுத் தடுமாறி வென்றது. இன்றைய போட்டியை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை அப்போட்டியில் இருந்து இந்திய அணியின் வீரர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள் என நம்பலாம். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக, ரிஷப் பன்ட் இடம் பெறுவார் என செய்திகள் வெளியாகி உள்ளன. டோனியின் ஆட்டமும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இன்றைய பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு, ஹர்திக் பாண்டியா முன்னதாக களமிறக்கப்படுவார் என்றும் தெரிகிறது.