குற்றாலத்தில் வெயில் 'சுள்’ பயணிகள் கூட்டம் ‘டல்’
6/27/2019 4:01:43 PM
குற்றாலம்: குற்றாலத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வெயில் காணப்படுகிறது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக
உள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் சற்று கண்ணாமூச்சி காண்பித்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் சீசன் இந்த ஆண்டு ஜூன் 2ம் வாரம் தாமதமாக துவங்கியது. அதனைத் தொடர்ந்து மூன்று தினங்கள் மட்டுமே சாரல் மற்றும் அருவிகளில் தண்ணீர் விழுந்த நிலையில் அதனை அடுத்து ஒரு வாரமாக சாரல் இல்லை.
தண்ணீர் வரத்து குறைந்து கிட்டத்தட்ட வறண்ட நிலையில் காணப்பட்டது. பின்னர் 20ம் தேதி மீண்டும் சாரல் பெய்தது. ஐந்து தினங்கள் சாரல் தொடர்ந்த நிலையில் கடந்த 2 தினங்களாக மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது. இன்று காலையிலும் சாரல் இல்லை. வெயில் காணப்பட்டது. ஓரளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவு நன்றாகவும் பழைய குற்றாலம் புலியருவி ஆகியவற்றில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. சீசன் நிலையற்ற தன்மையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் சுமாராகவே உள்ளது.