சிவாஜியை வைத்து படம் இயக்கிய மூத்த நடிகை விஜயநிர்மலா காலமானார்...கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர்
6/27/2019 3:40:47 PM
சென்னை: மூத்த நடிகை விஜய நிர்மலா மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. சிவாஜியை வைத்து படம் இயக்கிய விஜய நிர்மலா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தவர் ஆவார்.எங்க வீட்டு பெண், பந்தயம், நீலகிரி எக்ஸ்பிரஸ். பணமா பாசமா, சிரித்த முகம், சத்யம் தவறாதே, சோப்பு சீப்பு கண்ணாடி, உயிரா மானமா, அன்பளிப்பு, என் அண்ணன், சுமங்கலி கோலம் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன், மீனா, கவிதா (மலையாளம்) உள்ளிட்ட பல்வேறு படங்களையும் இயக்கியவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவி. ஐதராபாத்தில் நேற்று தனது வீட்டில் இருந்தபோது விஜய நிர்மலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருததுவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. விஜய நிர்மலா உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விஜய நிர்மலா தமிழ்நாட்டில் பிறந்தவர். 1950ம் ஆண்டு மச்ச ரேகை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 1957ம் ஆண்டு பாண்டுரங்கா மஹாத்மயம் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். திரைப்பட இயக்குனராகவும் விஜய நிர்மலா மாறினார். 1971ம் ஆண்டு மீனா (தெலுங்கு) என்ற படத்தை இயக்கினார். பின்னர் கவிதா (மலையாளம்) உள்பட சுமார் 32 படங்கள் இயக்கினார். 1983ம் ஆண்டு இயக்கிய பெஸவாடா பெப்புலி ெதலுங்கு படத்தில் சிவாஜி நடித்திருந்தார்.
அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் விஜய நிர்மலா பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணமா? பாசமா படத்தில் எலந்த பழம் பாடலுக்கு நடனமாடியவர் விஜய நிர்மலா.
கிருஷ்ணமூர்த்தி என்பவரை மணந்த விஜய நிர்மலா அவரிடம் விவாகரத்து பெற்ற பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்தார். நரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.