பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: திமுக, அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர்கள் ஆலோசனை
6/27/2019 2:55:57 PM
சென்னை, ஜூபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. ஜூலை 1ம் தேதி (திங்கள்) சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சட்டசபை கூடுவதையொட்டி, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சி தலைவர்கள் தலைமையில் நாளை நடைபெறுகிறது.தமிழக சட்டப்பேரவையில் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இருந்ததால், பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நான்கு மாத இடைவெளிக்கு பிறகு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டசபை கூட்டம் நாளை (28ம் தேதி) காலை 10 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ் (அதிமுக), விக்கிரவாண்டி ராதாமணி (திமுக) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்படும். இதையடுத்து மீண்டும் ஜூலை 1ம் தேதி (திங்கள்) தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் கூட உள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அறிவிக்கப்படாத மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றக்கூடாது, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விவாதம் நடத்த தயாராகி வருகிறார்கள்.
அதேநேரம் சபாநாயகர் தனபால் மீது திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து கடிதம் கொடுத்துள்ளார். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதியே (திங்கள்) அதற்கான அஜென்டா வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஜூலை 1ம் தேதி திமுக கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் 1.45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு சுமார் 20 நிமிட நேரம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது, திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோன்று, அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை காலை 11.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கட்சி தலைவர்கள் விளக்கி பேசுவார்கள். அதேநேரம், திமுக கொண்டு வந்துள்ள தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், அன்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நேற்று கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தி பேச திட்டமிட்டுள்ளார். காரணம், சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது கண்டிப்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும். பொதுவாக, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரும் ஒரு தீர்மானம் வெற்றி பெற்றால் அதிமுக அரசு கவிழும் ஆபத்தும் உள்ளது. அதனால், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெறும் என்பதால், நாளை நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் தனபால் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நிலையில், இந்த தீர்மானம் வந்தால் அதிமுக ஆட்சி கவிழும் ஆபத்து அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளது.