தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர் யார்: நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு வாய்ப்பு?
6/27/2019 2:52:19 PM
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர் பதவியை பிடிக்க அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதில் நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். இவர் வருகிற 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்தப்பதவியைப் பிடிக்க நிதித்துறை செயலாளர் சண்முகம், உள்ளாட்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, கவர்னரின் செயலாளர் ராஜகோபால், வீட்டு வசதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதில் சண்முகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இவர் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஹன்ஸ்ராஜ் வர்மாவும் கடும் போட்டியில் உள்ளார். இவர், அமைச்சர் வேலுமணி மூலமாக தலைமைச் செயலாளர் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தலைமைச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.அதேபோல, கவர்னரின் செயலாளர் ராஜகோபாலும் போட்டியில் உள்ளார். இவர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பரிந்துறையுடன் களத்தில் உள்ளார். ஆனால், இவர் தலைமைச் செயலாளராக வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வீட்டு வசதித்துறை செயலாளர் கிருஷ்ணன், நேர்மையான அதிகாரி. இவர், மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பியவர். இவருக்கும் சில பிரதமர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பரிந்துறை செய்வதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், தலைமைச் செயலாளர் பதவிக்கு சண்முகமும், ஹன்ராஜ் வர்மாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதில் சண்முகத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை அல்லது 29ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சண்முகம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டால், வீட்டு வசதித்துறை செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.