தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: ஓரிரு நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது
6/27/2019 2:51:32 PM
சென்னை: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் ஓரிரு நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதனால், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்தநிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஞயிற்றுக்கிழமையுடன் இணைந்து சனிக்கிழமையும் விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமையே தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி விடுவார்கள். இதையடுத்து அக்டோபர் 25ம் ேததி ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 25ம் தேதிக்கான பயணத்துக்கு இன்னும் 120 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதனால், இன்று காலை 6 மணி முதலே சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வமாக கூடினர். குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. பலர் இணையதளம் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்தனர். பல முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல், அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை ஊருக்கு செல்ல விரும்புவோர் நாளை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோன்று தீபாவளி அன்று (அக்டோபர் 27ம் தேதி) பயணம் செய்வோர் ஜூன் 29ம் தேதி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.