திருவனந்தபுரம் சிறையில் இருந்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
6/26/2019 4:43:58 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சிறையில் இருந்து 2 பெண் கைதிகள் தப்பியோடிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவை சேர்ந்தவர் சந்தியா. பாங்கோட்டை சேர்ந்தவர் ஷில்பா. திருட்டு வழக்கு தொடர்பாக இருவரையும் சில வாரங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த சிறையில் காலை நேரங்களில் கைதிகள் பல்வேறு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாலையில் மீண்டும் செல்லில் அடைக்கப்படுவார்கள்.
வழக்கம் போல் நேற்று காலை கைதிகளை வெளியே விட்டு இருந்தனர். பின்னர் மாலை 5 மணி அளவில் ஒவ்வொருவராக அழைத்து செல்லுக்குள் அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது சந்தியாவையும், ஷில்பாவையும் காணவில்லை என்றதும் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் சிறை வளாகம் முழுவதும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தியதில், பெண் கைதிகள் இருவரும் சிறையின் பின்புறம் வழியாக தப்பி ஓடியது தெரியவந்தது. உடனடியாக சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ்சிங்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.டிஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரு கைதிகளையும் பிடிக்கும் வகையில் உடனடியாக ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் நிலையங்களில் தேடி வருகின்றனர்.
திருவனந்தபுரம் சிறையில் இருந்து பெண் கைதிகள் தப்பியோடியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.