சென்னையில் அமைக்க ஏற்பாடு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி: போக்குவரத்துதுறை, மின்வாரிய அதிகாரிகள் தீவிரம்
6/25/2019 2:43:21 PM
சென்னை: சென்னையில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வோரின் வசதிக்காக, பொது சார்ஜிங் வசதி ஏற்படுத்தும் பணியில் போக்குவரத்துத்துறை, மின்வாரிய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.உலக அளவில் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் என்பது வளர்ந்த நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவாக இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறுள்ள சூழ்நிலையில் நாளுக்கு, நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கு சென்றாலும் சொந்த வாகனத்திலேயே பலரும் பயணிப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக நகர்புறங்களில் நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. இதனால் சிறிய அளவிலான தூரத்தை அடைவதற்குக்கூட நீண்ட நேரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. மாசடைந்த காற்றை ெதாடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு பல்வேறு விதமான ேநாய்கள் ஏற்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையால் வெப்பம் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில், எலக்ட்ரிக் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்ற மற்றொரு காரணமும் இருக்கிறது. இதையடுத்து ‘நேஷனல் எலக்ட்ரிக் மொபிலிட்டி மிஷன் பிளான்-2020 (என்இஎம்எம்பி )’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் எலக்ட்ரிக் கார்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. மேலும் இவ்வகையிலான கார்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறான வாகனங்கள் மின்சாரம் மூலம் மட்டுமே இயங்கும் என்பதால் அதற்கு ஆங்காங்கு, சார்ஜிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக இயக்க முடியும். இதைக்கருத்தில் கொண்டு அந்தவசதியை ஏற்படுத்தத்தேவையான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அதற்கான ஆலோசனைக்கூட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜிங் வசதி தேவை. இதற்காக சாலையோரங்களில் சார்ஜிங் பாயின்ட்டுகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது. இதற்காக மின்வாரியத்துடன் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது சாலை வரைபடத்தை வைத்து எங்கெல்லாம் சார்ஜிங் வசதி ஏற்படுத்தலாம், அதற்கு தேவையான வசதிகள் என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறினர்.