600 கி.மீ. மனித சங்கிலி எழுச்சியுடன் நடந்தது ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து ஆகும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
6/24/2019 3:39:02 PM
சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக, பாஜ தவிர்த்து, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், டெல்டா மாவட்ட விவசாயிகள், வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ராமேஸ்வரம் வரை 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று மாலை மனித சங்கிலி நடந்தது. இதில் அதிமுக, பாஜ தவிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.
மரக்காணம் ஈ.சி.ஆர். சாலையில் தொடங்கிய போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கலந்துகொண்டனர். கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். நாகப்பட்டினத்தில் எம்எல்ஏக்கள் மதிவாணன், தமிமுன் அன்சாரி கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை-கோவிலூர் பைபாஸ் கிழக்கு கடற்கரையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையில் மனித சங்கிலி நடந்தது. இதில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்பி, எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், நீலமேகம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மனிதச் சங்கிலி நிறைவடையும் இடமான ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் இந்த போராட்டம் குறித்து கூறும்போது, மனித சங்கிலி எழுச்சியுடன் நடந்தது. மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெறும்வரை போராட்டம் நடைபெறும் என்றார்.
வைகோ ஆவேசம்: மரக்காணத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசுகையில், ‘‘இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். இந்த திட்டம் அமைய உள்ள பகுதியில் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலங்கள் முற்றிலும் அழிந்து பாலைவனமாகும் நிலை உண்டாகும்’’ என்று ஆவேசமாக கூறினார்.