‘அழைப்பிதழில் பேர் இல்லை’ பரோலில் வந்த ஆயுள்கைதி மனைவியுடன் தற்கொலை
6/17/2019 3:19:00 PM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள விட்டலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(38). இவரது மனைவி சரஸ்வதி(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாமிநாதன் 2006ல் நடந்த பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். திருச்சி சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் காரைக்காலில் உள்ள தனது அண்ணன் வீட்டின் புது மனை புகுவிழாவுக்காக பரோலில் வந்தார். இன்று காலை அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். நேற்று புதுமனை புகுவிழாவுக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டு வந்தார். பின்னர் இரவில் திருவாரூர் தெப்பத்திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இரு ஆண் குழந்தைகளும் தூங்கியபின் சாமிநாதனும், சரஸ்வதியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை 7 மணியளவில் 2 குழந்தைகளும் விழித்துப்பார்த்த போது, தனது பெற்றோர் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துவிட்டு நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவகல்லூாி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரை இழந்ததால் இரு குழந்தைகளும் அனாதையானது.
சாமிநாதன் திருச்சி சிறையில் இருந்தபோது படித்து பட்டம் பெற்றார். பின்னர் சிறையிலேயே கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையும் செய்து வந்தார்.
அண்ணன் வீட்டு புதுமனை புகுவிழா பத்திரிகையில், சாமிநாதன் பெயர் போடப்படவில்லையாம். சிறைக்கு சென்றதால் என் பெயரை போடவில்லையா என கேட்டாராம். இதனால் அண்ணனுக்கும், இவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விட்டலூர் இவரது வீட்டின் அருகே சாலை அகலப்படுத்தவதற்காக இவரது வீட்டையும் அகற்றும்படி அதிகாரிகள் கூறினார்களாம். இதனால் மனமுடைந்து இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.