நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது: கே.எஸ்.அழகிரி சொல்கிறார்
6/10/2025 3:25:17 PM
பொள்ளாச்சி: சமூகநீதிக்கு எதிரான நீட்டை தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறினார்.கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். முன்னதாக அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வால் வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும். மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்திய பிறகு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு தேவையில்லை. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதாகும். நீட் தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏரி, குளங்களை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசு செயலற்ற அரசாக உள்ளது. நதிகளை தேசிய மயமாக்கினால் மட்டுமே நதிநீர் இணைப்பு சாத்தியமாகும். சென்னையில் இருந்து மதுரை வரையிலும் புதிய சாலை திட்டத்தை கைவிட்டு, அதற்கு மாறாக சென்னை-சேலத்துக்கு சாலை அமைப்பது மாநில அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. ஆனைமலை நல்லாறு திட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம். தமிழகத்தில் இந்தியை திணித்து மாணவர்களின் பாட சுமையை அதிகப்படுத்த கூடாது. விருப்பம் இருந்தால் எந்த மொழியிலும் படிக்கலாம். கடுமையான எதிர்ப்பு காரணமாக, மோடி நினைத்தால் கூட மக்களவையில் மும்மொழி கொள்கையை நிறைவேற்ற முடியாது. விவசாயிகளின் பிரச்னைகளை திமுக, காங்கிரஸ் கையில் எடுத்து போராடி வருகிறது. பாஜ.,வினர் விவசாயிகள் மீது அக்கறை செலுத்துவதில்லை. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, கொப்பரை விலையை உயர்த்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.