ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி டூவீலர் பிரசாரம்: 8ம் தேதி நடக்கிறது
6/6/2025 3:57:01 PM
நீடாமங்கலம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நீடாமங்கலத்தில் வரும் 8ம் தேதி 200 இருசக்கரவாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் இதற்கான பணிகளை அந்த நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
இந்த பணிகள் தொடர்ந்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிந்து விடுவதுடன், விவசாய நிலங்கள் பாலைவனமாகி குடிநீருக்கே மக்கள் அவதிப்படும் நிலை உருவாகும். எனவே இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடி வருகிறது. இதுபோல பொதுமக்களும், விவசாயிகளும், பல்வேறு அமைப்புகளும் தினந்தோறும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் நேற்று முன்தினம் திமுக தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்ததாக அனைத்து கட்சிகள் சார்பில் வரும் 12ம் தேதி மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந் நிலையில் சீர்காழி பகுதியில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க ‘ சீர்காழி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 36 இயக்கங்களின் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விரைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கருத்தரங்கம், பொதுக் கூட்டம், பரப்புரை பயணம், ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதென்று இந்த கூட்டு இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் திருவாரூர் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரம் வரும் 8ம் தேதியன்று 200 இருசக்கர வாகனங்களில் நீடாமங்கலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.