இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து 12 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்
6/3/2025 4:35:37 PM
சேலம்: ஓமலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 12 பேர், இன்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் கொண்டு சென்றனர்.சேலம் அருகேயுள்ள ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (22). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து இந்த வழக்கு நாமக்கல் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் கோகுல்ராஜ், காதல் விவகாரத்தில் ரயில் தண்டவாளத்தில் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில் முக்கிய சாட்சிகள் பல்டி அடித்தனர். இதையடுத்து இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதுடன், 4 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் விசாரணை துவங்கவுள்ளது. இந்த வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருக்கும் 12 பேர் இன்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப் பட்டனர். காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, வழக்கு முடியும் வரை மதுரை மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டிருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.