சென்னை தாம்பரம் எஸ்.ஐ. நெல்லையில் தூக்கிட்டு தற்கொலை: உயர் அதிகாரிகள் டார்ச்சரா?
5/30/2019 3:31:42 PM
ராதாபுரம்: நெல்லை மாவட்டம் ராதாபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல்(56). இவர் சென்னை தாம்பரத்தில் போலீஸ் எஸ்ஐயாக வேலைபார்த்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சண்முகவேல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் அவரை தேடிவந்தனர். அவரைப்பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் ராதாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் உறவினர்களும் சண்முகவேலை தேடிவந்த நிலையில் இன்று காலை சண்முகவேல் ஆற்றாங்கரை பள்ளிவாசல் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து சில நாட்கள் ஆகிவிட்டதால் உடல் அழுக தொடங்கிவிட்டது. குடும்ப பிரச்னையால் சண்முகவேல் இந்த முடிவை தேடிக்கொண்டாரா அல்லது வேலையில் உயர் அதிகாரிகள் டார்ச்சர் எதுவும் இருந்ததா? என ராதாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தற்கொலை செய்த சண்முகவேலுக்கு ஈசுவரி(53) என்ற மனைவி மற்றும் 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் சதீஷ்குமார்(27) என்பவர் மணிமுத்தாறு பட்டலியனில் போலீசாக உள்ளார். எஸ்ஐ ஓருவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.