குடிநீர் கிடைக்காமல் அவதி; நிலத்தடி நீர் திருட்டு வாலாஜாபாத், புதூரில் மக்கள் மறியல்: அதிகாரிகள் சமரசம்
5/30/2019 3:24:58 PM
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு பாலாற்று படுகையில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் 5 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் சுழற்சி முறையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.பேரூராட்சிக்குட்பட்ட சேர்க்காடு பகுதியில் இன்று குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும். இதற்காக காலி குடங்களுடன் காலை முதலே குழாயின் அருகில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் தண்ணீர் வரவில்லை. பணிக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வாலாஜாபாத்- தாம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பகுதி முழுவதும் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் சீராக வருவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பேரூராட்சி மூலம் வழங்கப்படும் இந்த குடிநீர், எந்நேரம் வினியோகிக்கப்படும் என்று தெரியாமல் தவிக்கிறோம். இதுபற்றி கேட்டால், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். இன்று காலையில் வரவேண்டிய குடிநீர் 8 மணி வரை வரவில்லை’ என்றனர். அதற்கு இன்ஸ்பெக்டர், ‘சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலரிடம் தெரிவித்து குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை சோழவரம் ஒன்றியம், பூதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்குமேடு கிராமத்தில் தனியார் ஒருவர் 6க்கும் மேற்பட்ட இடங்களில் மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து, தனியார் லாரிகளுக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகிறார். இதனால் கொக்குமேடு, மாறம்பேடு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளின் கிணறுகளில் நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.இதுகுறித்து பூதூர் ஊராட்சி, பொன்னேரி கோட்டாட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட தனியார் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக உள்ளனர். நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார்மீது நடவடிக்கை மற்றும் கோட்டாட்சியரை கண்டித்து, இன்று காலை பூதூர்-அருமந்தை செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘’வருவாய் துறை அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினால்தான் மறியலை கைவிடுவோம்’’ என்று மக்கள் கூறினர். இதன்பிறு அதிகாரிகள் சமரசத்தை ஏற்று மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.