பைக் மீது லாரி கவிழ்ந்து புதுப்பெண் பரிதாப பலி கணவர் கால் துண்டானது: சேலம் அருகே கோர விபத்து
5/28/2019 2:48:56 PM
சேலம்: சேலம் அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் புதுப்பெண் பலியானார். கணவரின் கால் துண்டானது. சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் கூத்துமேடு மலை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் நாகராஜ் (26), போர்வெல் தொழிலாளி. இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன், தர்மபுரி மாவட்டம் அரூர் கலசம்பாடியை சேர்ந்த பழனியம்மாள் (19) என்பவருடன் திருமணம் நடந்தது. நேற்று மதியம், ஏற்காட்டில் இருந்து மாமனார் வீட்டிற்கு பழனியம்மாளுடன் பைக்கில் புறப்பட்டார் நாகராஜ். மஞ்சவாடி அடிமலைபுதூர் செட்டியார்காடு பகுதியில் சென்றபோது எதிரே வேகமாக அட்டைபெட்டி லோடு ஏற்றி வந்த லாரி, திடீரென சாலையில் தாறுமாறாக ஓடி நாகராஜ் சென்ற பைக்கின் மீது தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில், புதுமண தம்பதியர் சிக்கினர். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், லாரிக்கு அடியில் சிக்கிய தம்பதியை மீட்டனர். இதில், பழனியம்மாள் உயிரிழந்தார். நாகராஜூவின் வலது கால் துண்டானது. உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வீராணம் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூரை சேர்ந்த பிரபாகரன் (26) என்பவரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தார். மற்றொரு டிரைவரான திருமால், விபத்து ஏற்பட்டவுடன் தப்பியோடிவிட்டார். தேடி வருகின்றனர்.