8வது ஆண்டாக தொடரும் துயரம் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை: விவசாயிகள் கவலை
5/27/2019 3:19:42 PM
மேட்டூர்: தொடர்ந்து 8வது ஆண்டாக, இந்தாண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, கரூர், நாகப்பட்டணம் உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடிக்கு ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொருத்து தண்ணீர் தேவை குறையும். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். கடைசியாக 2011ம் ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
நடப்பாண்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் போதுமானதாக உள்ளது. இதனால், ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, 8வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கர்நாடகத்திலிருந்து காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை வழங்கினால் மட்டுமே குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். இல்லையெனில், கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பி திறக்கப்படும் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி, அவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 8வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரி வித்துள்ளதால், டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 51 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும், திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 47.49 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 47.33 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 16.17 டிஎம்சியாக உள்ளது. இதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 900 கனஅடியாக உள்ளது.