பூண்டி ஏரி வறண்டதால் மீன் வளர்ப்பு திட்டம் பாதிப்பு
5/16/2019 3:24:26 PM
திருவள்ளூர்: பருவமழை பொய்த்ததால் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஏரியானது வறண்டு வரும் நிலையில், மறுசுழற்சி செய்ய போதிய தண்ணீர் இல்லாததால் மீன் வளர்ப்பு திட்ட தொட்டிகளில் மீன்கள் வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றானது பூண்டி ஏரி. இங்கு, மீன் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மீன்கள் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென மத்திய அரசு ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதியில், மீன்கள் வளர்க்கும் வகையில் 68 தொட்டிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பில் 20 தொட்டிகள் வாங்கவும், ரூ.1.02 கோடி மதிப்பில் மீன்களுக்கான உணவுகள், ரூ.5 லட்சம் மதிப்பில் மீன் குஞ்சுகள் வாங்குவதென முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள பணம் மீன் பராமரிப்பு செலவுகளுக்கென ஒதுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 26.11.2025 அன்று தொட்டிகளில் மீன் வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 10 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் எனவும், ஒவ்வொரு மீனும் 800 கிராம் எடை வரை வளர்த்து விற்பனைக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டது. மீன்கள் வளர்க்கும் தொட்டியில் உள்ள நீரை இயந்திரம் மூலம் முறைப்படி மறுசுழற்சி செய்து, மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் பூண்டி ஏரி முற்றிலும் வறண்டது. இதனால், தண்ணீரை மறுசுழற்சி செய்ய இயலாமல் பல டன் எடை கொண்ட மீன்கள் செத்தன. கிருஷ்ணா நீர் வரத்தால், மீண்டும் ஏரியில் தொட்டிகளில் மீன் வளர்க்கப்பட்டது. தற்போது, கிருஷ்ணா நீர்வரத்து நின்றதால் பூண்டி ஏரியானது வறண்டு வருகிறது. தொட்டிகளில் மீன்களை வளர்க்க போதுமான தண்ணீர் இல்லாததால், மறுசுழற்சி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீன்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.