நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் சுடுகாட்டை ஆக்கிரமித்து வீடு, கடை, வணிக வளாகங்கள்: அதிகாரிகள் அலட்சியம்
5/16/2019 3:22:44 PM
கூடுவாஞ்சேரி: சென்னை நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் 2 ஏக்கர் பரப்பில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சுடுகாட்டை பலர் ஆக்கிரமித்து கடைகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதனால் பிணத்தை புதைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மேலும் சுடுகாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கட்டிட இடிபாடுகள் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதி சாலை முழுவதும் கழிவுநீர் பரவி, கடும் துர்நாற்றமும் கொசு தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சுடுகாட்டை ஒட்டியுள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதால், அந்த நீரை குடிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயநிலை உள்ளது. சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து தரும்படி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர், பேரூராட்சிகளின் இயக்குநர் நேரில் ஆய்வு செய்து, சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்றனர்.