ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திருவாரூரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டம்; உயிரை கொடுத்தாவது தடுப்போம் என சூளுரை
5/16/2019 2:25:02 PM
மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, 274 இடங்களில் 3,500 அடி முதல் 6 ஆயிரம் அடி வரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரை 1794 சதுர கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. தற்போது, கடந்த 12ம் தேதி 2வது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ் கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்படும்.
இந்த திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீருக்கே பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ள இடங்களின் பட்டியலில் உள்ள முதலாவது இடம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருக்களார் ஊராட்சி. இங்கு நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் அடுத்த மாதம் (ஜூன்) கடைசி வாரத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி திருவாருர் மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
முதல்கட்டமாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இதில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர். நேற்று காலை போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் ஏராளமானோர் திருக்களாரில் ஒன்று திரண்டனர். இதில் பெண்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பாடல் வடிவில் முழக்கங்கள் எழுப்பி கும்மியடித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதேபோல், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நான்காம்சேத்தி கிராமத்தில் விவசாயிகள் தங்களின் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயிரைக் கொடுத்தாவது இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என சூளுரைத்தனர்.
மாவட்ட அளவில் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வை. சிவபுண்ணியம் கூறுகையில், ‘‘திருக்களாரில் நேற்று போராட்டம் தொடங்கி விட்டது. நெடுவாசல் போல வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. இனி நாகை மாவட்டத்திற்கும் போராட்டம் எடுத்துச் செல்லப்படும். காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட வேண்டும். இங்கிருந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வெளியேற வேண்டும். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றுவோம். இதனை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை எனில் விளைவுகள் கடுமையாக இருக்கும்’’ என்றார்.
இந்நிலையில், ஹைட்ரோகார்பனுக்கு எதிராக திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தவபாண்டியன், நகர செயலாளர் சுதர்சன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி நாகராஜ், திமுக ஒன்றிய விவசாய அணி நிர்வாகி ரசாக் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஸ்டாலினுக்கு அழைப்பு: தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைத்து சதி செயலில் ஈடுபட்டிருப்பது பொருத்துக்கொள்ள முடியாத ஒரு செயலாக உள்ளது. இந்த திட்டத்தை தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி திமுக தலைமையில் தொடர் போராட்டம் நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் இதற்கு தயார். எனவே போராட்டத்துக்கு தலைமை தாங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.