ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக, பாஜ கூட்டணி ஜெயிக்காது: வைகோ திட்டவட்டம்
5/8/2025 5:45:43 PM
அவனியாபுரம்: ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுக, பாஜ கூட்டணி வெற்றிப்பெற முடியாது என்று வைகோ கூறினார். மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி; தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும். வாக்குகளுக்கு ஆயிரம், 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அதிமுக, பாஜ கூட்டணியால் வெற்றிப்பெற முடியாது. நடந்து முடிந்த 18, நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற இயலாது.
இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி ஒரு சார்பாகவும் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு ஆதரவாகவும் நெறிமுறைகள் தவறி செயல்பட்டு வருகிறது. முன்னாள் இந்திய தேர்தல் அதிகாரி குரேசி, ராணுவத்தை மையப்படுத்தி வாக்கு கேட்டிருக்க கூடாது என கூறியுள்ளார். உத்திரபிரதேசத்தில் மாயாவதிக்கு 72 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை செய்தது போன்று, மோடியையும் தடை செய்திருக்க வேண்டும். மத்தியில் புதிய ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மாநில கட்சிகளுக்கும் நிச்சயம் அதிகாரம் இருக்கும். இவ்வாறு கூறினார்.