அம்பத்தூர் சிடிஎச் சாலையில் மின்வடம் பதிக்கும் பணி மந்தம்: போக்குவரத்து பாதிப்பு
5/8/2025 5:38:15 PM
அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் சிடிஎச் சாலையோர பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு பூமியில் மின்வடம் புதைக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சென்னை-திருப்பதிக்கு அம்பத்தூரர் வழியாக சிடிஎச் நெடுஞ்சாலை செல்கிறது. இவ்வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை அமைந்துள்ள திருமுல்லைவாயல்-அம்பத்தூர் எல்லையான தனியார் மருத்துவமனையில் இருந்து அம்பத்தூர் காவல் நிலையம் வரை ஆக்கிரமிப்பு காரணமாக சாலை மிகவும் குறுகியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பினால் வாகனங்கள் திணறி வருகின்றன.
இந்நிலையில், அம்பத்தூர் பஸ் நிலையத்தை சுற்றி சோழம்பேடு சாலை, பழைய நகராட்சி சாலை, பழைய பரோடா வங்கி சாலை, பள்ளிக்கூட தெரு, தெற்கு பூங்கா தெரு, வடக்கு பூங்கா தெரு, மௌனசாமி மடம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிடிஎச் சாலையோரத்தில் கடந்த சில வாரங்களாக ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் சார்பில் பூமியில் மெகா பள்ளம் ேதாண்டி, அதில் மின்வடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலையோரத்தில் சுமார் 7 அடி ஆழத்துக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லவோ, வாகனங்கள் கடந்து செல்லவோ முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் விபத்தில் சிக்கி அடிபடுகின்றனர். இங்கு நிலவும் வாகன நெரிசலில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட நகர முடியாமல் சிக்கி தவிக்கின்றன.
மேலும், இப்பணிகளால் சிடிஎச் சாலையோர வணிக நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பணிகளை போர்க்காலத்தில் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இப்பணிகள் இன்றுவரை மந்தகதியில் நடைபெறுகிறது. எனவே, அம்பத்தூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் சிடிஎச் சாலையோரங்களில் தனியார் நிறுவன மின்வடம் பதிப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.