கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை
2/22/2019 2:54:23 PM
திருவாரூர் : ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வராவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நடராஜன் எச்சரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அவர் அளித்த பேட்டி: பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும். பிஎஸ்என்எல் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுடன் 2வது ஊதிய மாற்று குழுவின் விடுபட்ட பரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 19ம் தேதி முதல் 21ம்தேதி வரை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தொலைதொடர்பு துறை தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
ஆனால் இதையும் மீறி இந்தியா முழுவதும் 72 மணி நேர தொடர் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மூடுவிழா காண போவதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டுள்ள செய்தி ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் நவரத்தினங்கள் என்று கருதப்படுவதால் அதனை பாதுகாத்திட மத்திய அரசு முன் வர வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும்.