தொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு
2/22/2019 2:51:42 PM
சென்னை : வருகின்ற மக்களவை தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட், ஒரு ராஜ்யசபா எம்பி சீட், பாஜகவுக்கு 5 சீட் என முடிவு செய்யப்பட்டு கையெழுத்தாகி உள்ளது. தேமுதிகவுக்கு 3 அல்லது 4 தொகுதிகள் மட்டும் கொடுப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறினர். இதை ஏற்க தேமுதிகவினர் மறுத்து விட்டனர். இதனால் அதிமுக, தேமுதிக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. இந்நிலையில், புதிய தமிழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், தேர்தல் செலவுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கேட்டு வருகின்றனர். இந்த பேரம் படியாததால், சிறு கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அதிமுக தவிக்கிறது. இந்நிலையில், அதிமுக தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்கான அவசர கூட்டம் நேற்று இரவு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்து பேசியது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. திருநாவுக்கரசர், திமுக கூட்டணிக்கு அழைத்து உள்ளார். விஜயகாந்த் அந்த அணிக்கு சென்று விட்டால், நமது அணியின் நிலைமை எப்படி இருக்கும், சட்டமன்ற தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. மக்களவை தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாவிட்டால், ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே விஜயகாந்த்தை எப்படியும் இந்த அணியில் சேர்த்து விடவேண்டும் என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. விஜயகாந்த் தற்போது, பாமகவை விட அதிக தொகுதி கேட்டு பிடிவாதமாக உள்ளார். ஆனால் 5 தொகுதிக்கு மேல் விஜயகாந்த்துக்கு கொடுக்க முடியாத நிலை உள்ளது. அவசரப்பட்டு பாமகவுக்கு 7 தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட் கொடுத்து விட்டோம். இனி அங்கிருந்து குறைக்கவும் வாய்ப்பு இல்லை. எனவே, விஜயகாந்த்தை திருப்தி செய்ய வேறு என்ன யுக்திகளை கையாள்வது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை மீண்டும் விஜயகாந்த்தை சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பாமகவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக உள்ளார். அவரும் இன்று மாலை 4 மணி வரை அதிமுகவுக்கு கெடு விதித்து உள்ளார். இன்று மாலைக்குள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு ஏற்படுத்தாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என விஜயகாந்த்தும் முடிவு செய்து உள்ளார்.
இந்த முடிவு குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பிரமேலதாவும், சுதீசும் கூறி உள்ளனர். விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தெரிவித்து விட்டனர். எனவே இன்று மாவட்ட செயலாளர்கள் யாரும் சென்னைக்கு வரவேண்டாம். இன்று மாலை நிலவரத்தை அறிந்து கொண்டு தகவல் தெரிவிப்பதாக தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இன்று மாலைக்குள் தேமுதிகவுக்கு அதிமுக சார்பில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றால் நாளை அடுத்த கட்ட முடிவு எடுக்க தேமுதிக தயாராகி வருகிறது. இதற்கிடையே டிடிவி தினகரன் சார்பிலும் தேமுதிகவுக்கு தூது மேல் தூது சென்று கொண்டிருக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தயார். நீங்கள் 25 தொகுதிகளில் போட்டியிடுங்கள். 15 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டதாம். இதை 3ம் கட்ட பரிசீலனையாக தேமுதிக வைத்துள்ளதாம். தனித்து போட்டியிடுவதா, அல்லது வேறு அணியில் சேருவதா, 3வது அணியை உருவாக்குவதா என அடுத்தடுத்து பல திட்டங்களை கையில் வைத்துள்ள தேமுதிக நாளை காலை முதல் புதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
40 தொகுதிகளுக்கும் 24ம் தேதி முதல் விருப்பமனு
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் தேர்தல் விருப்ப மனுக்களை வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மார்ச் 6ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு நிர்வாகிகளாக இருப்பவர்களும், அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிமுக 2 சீட், 3 சீட் என்று உதாசீனப்படுத்துவதால் தனித்துப் போட்டியிடுவதா, டிடிவி தினகரனுடன் செல்வதா என்பது குறித்து முடிவு எடுக்காமல் உள்ள விஜயகாந்த் அதிரடியாக 40 தொகுதிக்கும் விருப்ப மனு வாங்குவதாக அறிவித்து, அதிமுக தலைவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.