ஓட்டுக்கு பணம் கொடுத்தால் திட்டுவார்கள் என்பதால் 2000 வழங்கும் வித்தையை கையில் எடுத்துள்ளனர் :கமல்ஹாசன் தாக்கு
2/22/2019 2:42:55 PM
திருவாரூர் : மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நேற்று இரவு திருவாரூர் தெற்கு வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியது: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உரிய நிதி இல்லை என்று தெரிவித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக மட்டும் 2 ஆயிரம் கோடி செலவு செய்ய எங்கிருந்து பணம் வந்தது. தற்போது 60 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். 60 லட்சம் தொழிலாளர்களும் ஏழ்மை நிலையிலிருந்து மீண்டு வர குறைந்தபட்சம் 30 வருடங்கள் ஆகும். தேர்தல் நேரம் நெருங்கி விட்டதால் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக ஓட்டுக்கு பணம் கொடுத்தால் திட்டுவார்கள் என்பதால் 2 ஆயிரம் வித்தையை கையில் எடுத்துள்ளனர். இதுபோன்ற குறைபாடுகளை சுட்டிக் காட்டினால் ஐடி ரெய்டு வரும் என்று கூறுவார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏன் தனித்து போட்டி என்ற கேள்வி உங்களிடம் உள்ளது. நாட்டின் அரசியலை தீர்மானிப்பதற்கு தமிழனுக்கு சம பங்கு உள்ளது. அந்த வகையில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பங்கும் தமிழர்களுக்கு உள்ளது. அதனை மக்களிடத்தில் கேட்பதற்காகவும், உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இங்கு வந்துள்ளேன். எனவே வரும் தேர்தலில் புதிதாக வாக்களிப்பவர்கள் சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது கொள்கை எது என்று கேட்பீர்கள். தமிழகத்தின் நலன் மட்டுமே எங்களது கொள்கையாகும். இதுகுறித்து புத்தகமாக வெளியிட உள்ளோம். ஆனால் ஏற்கனவே புத்தகமாக வெளியிட்டவர்கள் இன்று தங்களது சுயலாபத்திற்காக கூட்டணி சேர்ந்து விட்டார்கள். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.