மீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்
2/21/2019 3:40:30 PM
பொன்னேரி: மீஞ்சூரில் வாலிபரை கொலை செய்த வழக்கில் ஐந்துபேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர், அண்ணா தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். இவரின் மகன் லட்சுமணன் (25). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 10ம் தேதி மீஞ்சூரில் நடந்த நண்பர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 9ம் தேதி இரவு லட்சுமணன் சென்றார். இதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இதுபற்றி கடந்த 13ம் தேதி மீஞ்சூர் போலீசில் லட்சுமணனின் தந்தை புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது திருமண மண்டபத்தின் பின்புறமுள்ள கிணற்றில் லட்சுமணன் தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி உத்தரவின்பேரில், பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.இந்த நிலையில், சென்னை ஒரகடம் பகுதியில் லட்சுமணன் பைக் அனாதையாக நின்றிருந்தது. அந்த பைக்கை ஓட்டிய வாலிபர் கொடுத்த தகவல் அடிப்படையில், மீஞ்சூர், ஏரிக்கரை தெருவை சேர்ந்த அஜித் (25), மணிகண்டன் (25), இன்பராஜ் (21), சாமுவேல் (16), விஜய் (17) ஆகிய 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’திருமண மண்டபத்தில் லட்சுமணன் மது அருந்தியபோது அவரது பாக்கெட்டில் இருந்த ₹5 ஆயிரம், செல்போனை பறித்தோம். அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் லட்சுமணனை பீர்பாட்டிலால் அடித்து கொன்றோம். சடலத்தை மண்டபத்தின் பின்புறமுள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றோம்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதையடுத்து 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அஜித், மணிகண்டன், இன்பரசு ஆகிய 3 பேரை சிறையிலும் சாமுவேல், விஜய் ஆகிய இருவரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர்.