எம்பி தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார், வாகனங்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு
2/21/2019 2:39:19 PM
திருவள்ளூர்: நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, மாவட்டம் தோறும் போலீசார் எண்ணிக்கை, வாகனங்களின் விவரம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.பி.,க்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் நடத்த தேர்தல் கமிஷன் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்டங்களில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பட்டியல், ரவுடிகள் பட்டியல், இதுவரை கைது செய்யப்படாத குற்றவாளிகள் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீசாரின் எண்ணிக்கை, பயன்படுத்தும் நிலையில் உள்ள வாகனங்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முக்கிய தொகுதிகளுக்கு துணை ராணுவம் தேவைப்படும் என்றால் அதுபற்றி அறிக்கை அனுப்ப எஸ்.பி.,க்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தேவையான அளவு போலீசார் குறித்த கணக்கெடுப்பு எஸ்.பி., பொன்னி தலைமையில் நடந்து வருகிறது. வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை, அமைவிடம் மற்றும் அதன் தன்மைக்கேற்ற அளவில் உள்ளூர் போலீசார், சிறப்பு படை போலீசார், ‘மொபைல் பார்ட்டி’ மற்றும் ரோந்து போலீசார் தேவை குறித்தும் கணக்கெடுப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
தேர்தல் வாகனங்களில் ‘ஜிபிஎஸ் கருவி’
நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் வாகனங்களில், ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும், பறக்கும் படையினரின் வாகனங்கள், நிலையான கண்காணிப்பு குழுவின் வாகனங்கள், மின்னணு இயந்திரம் மற்றும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் கொண்டு செல்லும் வாகனங்கள், மண்டல வாக்குப்பதிவு அதிகாரிகளின் வாகனங்களில், ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், வாகனங்கள் எங்கே செல்கிறது, நிற்கிறதா என கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அறிய முடியும்.