திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
2/21/2019 2:33:10 PM
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்வதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுதி உடன்பாடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன், திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசி முடிவுக்கு வந்தனர். அந்த முடிவின்படி காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், சஞ்சய் தத் ஆகியோர் சென்னை வந்தனர். நேற்று இரவு திமுக தலைவர் ஸ்டாலினை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுவையைச் சேர்ந்த ஒரு தொகுதியையும் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் இந்த சந்திப்பின்போது தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக, இரு கட்சிகளின் குழுக்களும் இணைந்து பேசி முடிவு எடுப்பது என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக இரு கட்சிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் பேசி முடிவு செய்வது என்றும் பேசப்பட்டன. இரு கட்சிகளின் தலைவர்களும் இந்த கருத்தை ஒப்பந்தம் போட்ட பிறகு நிருபர்களிடம் தெரிவித்தனர். பாஜ கூட்டணி நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று தலைவர்கள் எடுத்துக் கூறினர். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.