மின்தடையால் விசைத்தறி தொழில் முடக்கம்: வேதனையில் தொழிலாளர்கள்
2/21/2019 2:27:22 PM
பள்ளிப்பட்டு: ஆர்கே.பேட்டை பகுதியில் நிலவிவரும் மின்தடையால் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய அம்மையார் குப்பம், நாராயணபுரம், காண்டாபுரம், ராகவநாயுடுகுப்பம், ஆர்.கே.பேட்டை, ராஜாநகரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம், காளிகாபுரம், ஜனகராஜ்குப்பம் மற்றும் கதனநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி கூடம் உள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டியால் விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. தற்போது பாவு, நூல் கிடைக்காததால் விசைத்தறி ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விசைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்கள் போதி வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 வாரமாக அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது. இதன் காரணமாக விசைத்தறி இயக்க முடியவில்லை. பாவு ஓட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, விசைத்தறி நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மின்தடையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெசவாளர்கள் கூறுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “ஆர்.கே.பேட்டை விளக்கனாம்பூடிபுதூரில் உள்ள மின்மாற்றி லோடு தாங்காததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கூடுதலாக மின் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்குள் மின்மாற்றி இயக்கப்படும். அதன்பின் மின்தடை இருக்காது” என்றனர்.