குடிநீர் கிடைக்காமல் அவதி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
2/21/2019 2:24:32 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு செய்யாற்று படுகையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர், செய்யாற்று படுகையில், ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி சுத்தீகரிக்கப்பட்டு கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்யாற்றில் தண்ணீர் குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. 4 கி.மீ தொலைவில் உள்ள பெருநகர் கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று, உத்திரமேரூர்- பெருநகர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பெருநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.