உலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு
2/20/2019 3:44:19 PM
புதுடெல்லி: இந்திய கபடி வீரரான அனுப் குமார் கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்திய கபடி அணியை உலகக் கோப்பையில் வழிநடத்திய அனுப் குமார், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த புரோ கபடி போட்டியில் ஆடுவதற்கு முன்பு தனது ஓய்வை அறிவித்தார். கடந்த 15 ஆண்டு கபடி வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் அவர், தேசிய அணிக்கு 2010 மற்றும் 2014ம் ஆண்டுகளில் தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர். கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார்.சர்வதேச கபடி போட்டிகளை 2006ம் ஆண்டில் இலங்கையில் நடந்த தெற்காசிய போட்டிகளிலிருந்து துவங்கிய இவர், கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அப்போது தான், 2014ம் ஆண்டு இன்சேன் ஆசிய போட்டிகளையும், 2016ம் ஆண்டு உலகக் கோப்பை கபடிப்போட்டியையும் இந்திய அணி வென்றது. மேலும், புரோ கபடி கோப்பையின் 2வது சீஸனின் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்தபோது, யூ மும்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுகுறித்து, அனுப் குமார் கூறுகையில், ‘‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன். ஆனால், அது காலப்போக்கில் என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியானது. ஒருநாள் இந்திய அணிக்காக நாம் ஆடி தங்கம் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். அந்த கனவு நிறைவேறியதை என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது. ஓய்வு பெற்றாலும் வீரராக அல்லாமல், கபடி விளையாட்டில் என்னால் முடிந்த பணியில் தொடருவேன்” என்று கூறினார்.